வேளாண்மை பொருட்களை மூலதனமாக வைத்து இயங்கும் தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் எனப்படும். இவை வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், வேளாண் இடுபொருட்கள் (விதைகள், உரங்கள்) தயாரிக்கும் நிறுவனங்கள் ஆகும். எல்லா இடத்திலும் எல்லா பொருளும் விளைவதில்லை. உணவை பதப்படுத்துவது இந்த குறைக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
வேளாண் விதைத் தொழில்
விளை பொருட்களை உற்பத்தி (Production) செய்வதில் பெரும் பங்கு வகிப்பது விதைகள் மற்றும் உரங்கள். நல்ல விதையின்றி விளைச்சல் இல்லை. தரமான விதைகள் தான் விளை பொருட்களின் உற்பத்திக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. விதைத்தொழிலில் முக்கிய பங்கு வகிப்பது பொதுத்துறை. பொதுத்துறையில் தேசிய விதைக் கழகம், இந்திய மாநில பண்ணை கூட்டவை, மாநில விதைக் கழகங்கள் மற்றும் மாநில பண்ணைக் கழகம் ஆகியவை அடங்கும். இவை மாநில வேளாண் பல்கலைக் கழகங்கள் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் முதலியவை கண்டுபிடிக்கும் விதைகளை (Seeds) உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன. இந்தியாவில் சுமார் இருநூறு முதல் ஐநூறு தனியார் விதை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் ஐந்து மில்லியன் மதிப்புள்ள விதைத் தொழில் மக்களின் உணவுப் பழக்கவழக்க மாறுதலினால் வியக்கத்தக்க மாற்றத்தை அடைந்து கொண்டு இருக்கிறது.
உரங்கள்
வேளாண் இடுபொருட்களில் உரங்கள் (Fertilizer) உணவு உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உணவு, காற்று, நீர் எப்படி தேவையாக இருக்கிறதோ அதே போல் பயிர் வளர்ச்சிக்கு நிலம், நீர், உரம் மூன்றும் முக்கியமாகத் திகழ்கின்றன. உரங்கள் இரண்டு வகைப்படும். அவை, உயிர்பொருள் உரம் மற்றும் உயிர்பொருள் சார்பில்லாத உரம்.
உணவு பதனிடும் தொழில்
உணவு பதனிடுவது தொன்றுதொட்டு நம் நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது. நம் வீட்டு பாட்டியின் கைப்பக்குவம், இன்று வளர்ந்து வரும் ஒரு தொழில். இன்றைய கணினி யுகத்தில் அவசரகதியில் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில் உடனடி உணவு வகைகளும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும் அவசர நேரத்தில் கைகொடுக்கின்றன. உணவு பதனிடும் தொழில்களானவை பழங்கள் மற்றும் காய்கள் பதனிடும் தொழில், மீன் பதனிடும் தொழில், பால் பதனிடும் தொழில் எனப் பல் வகைப்படும். இந்தியர்களிடம் செலவிடக்கூடிய வருமானம் (Income) அதிகம் இருப்பதால் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருகின்றன. இதனால் தானியங்கள், பருப்பு வகைகள், உப்பு சர்க்கரை, நறுமணப்பொருட்கள் இவைகளில் செலவிடும் தொகை குறைந்து பால் பொருட்கள், மாமிசம், முட்டை, மீன், பழங்கள், பானங்கள் முதலியவற்றில் செலவிடும் தொகை அதிகரித்துவிட்டது.
வேளாண் சார்ந்த தொழிலில் வாய்ப்புகள்
இந்தியாவின் மாறுபட்ட தட்பவெப்பநிலை, பலவகை உணவுப் பொருட்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 900 மில்லியன் மக்கள் தொகையும் அதில் 250 மில்லியன் மத்திய வர்க்கத்தினரும் இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தைத் திறனுக்கு எடுத்துக்காட்டு. ஒரு சராசரி இந்தியன் வீட்டு செலவில் சுமார் ஐம்பது சதவீதம் உணவுப்பொருட்களுக்கு செலவிடுகிறான். இந்தியாவின் மக்கள் தொகை தொழிலுக்குத் தேவையான ஆட்கள் பற்றாக்குறையைக் குறைக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் பதனிடும் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதத்தை விட குறைவானது. பழங்களில் மாம்பழம், திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, இலந்தைப்பழம், மாதுளை, சீதாப்பழம் முதலியவற்றிற்கு அதிக ஏற்றுமதி (Export) வாய்ப்புகள் உள்ளன. காய்கறிகளில் வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய் முதலியவைகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நிறுவனங்கள்
விளை பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி முதலியவற்றை மேம்படுத்துவதற்காக 1986-ஆம் ஆண்டு வேளாண் உணவுப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனம் (APEDA) உருவாக்கப்பட்டது. வேளாண் ஏற்றுமதியை அதிகப்படுத்துவதற்கும், அந்நிய செலாவணியை அதிகப்படுத்துவதற்கும், வேளாண் பெருமக்களுக்கும் அதிக வருவாய் ஈட்டுவதற்கும் விளை பொருள்களின் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியம்.
தேங்காய் உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த தொழில் களை முன்னேற்றுவதற்காக 1981-ஆம் ஆண்டு கொச்சினை தலைமையகமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தேங்காய் வளர்ச்சி மன்றம்.
தேங்காய் வளர்ச்சி மன்றத்தின் குறிக்கோள்கள்
- தரமான தென்னங்கன்றுகளை (Coconut) உற்பத்தி செய்தல்
- தேங்காய் சாகுபடி செய்யும் நிலங்களை அதிகரித்தல்
- தேங்காய் உற்பத்தியை அதிகரித்தல்
- ஒருங்கிணைந்த பூச்சி (Pest) மற்றும் நோய் கட்டுப்பாடு
- தேங்காய் சார்ந்த தொழில்களை வளப்படுத்துவது
ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003
إرسال تعليق